பாட்னா,
பீகாரின் பாட்னா நகரில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பீகாரில் உரிய நியாயம் கிடைக்காத நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தருக்கு கடந்த 8-ந்தேதி சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி மாணவியின் தாயார் கூறும்போது, பீகாரில் எங்களுக்கு நியாயம் கிடைத்திருந்தால், நாங்கள் ஏன் டெல்லிக்கு வர போகிறோம்? என கேட்ட அவர், மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினார். பீகார் போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறிய அவர், வழக்கை மூடி மறைக்கவே அவர்கள் முயல்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
இந்த வழக்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறப்பட்ட சூழலில், போலீசார் கூறும்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தகவல்களை டாக்டர்கள் உறுதி செய்யவில்லை என்றனர்.
இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கில், காலதாமதம் ஏற்படுத்திய, சரியான தருணத்தில், நுண்ணறிவு தகவல்களை சேகரிக்க தவறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாட்னா போலீசின் மூத்த அதிகாரிகள், 2 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர்.
சம்பவத்தின்போது, அந்த மாணவி விடுதி அறையில் சுயநினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார். சக மாணவிகள் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார். அறையில் சில தூக்க மாத்திரைகள் கிடந்துள்ளன.
இதனால் முதலில், தற்கொலை வழக்கு என போலீசார் கூறினர். ஆனால், பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள், கிடைத்தன. தடய அறிவியல் ஆய்வு முடிவும் கூட, அவர் மரணத்திற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கான சான்றுகளை உறுதி செய்தது.
இதனால், பலாத்கார குற்றச்சாட்டு வலுவடைந்தது. இதனை தொடர்ந்து எழுந்த நெருக்கடியால், வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்கும்படி பீகார் அரசு பரிந்துரைத்தது.
அந்த மாணவி மரணத்தின்போது அணிந்திருந்த உள்ளாடையில் ஆணின் இனப்பெருக்க உயிரணு இருந்துள்ளது. இதனை தடய அறிவியல் சோதனையின்போது, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதில் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இதனுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் மரபணுவை ஒப்பிட்டு, பரிசோதிக்க சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.