

சியாட்டில்,
இந்தியாவை சேர்ந்த ஜானவி கந்துலா என்ற 23 வயது மாணவி அமெரிக்காவின் வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புக்கான முதுகலை பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, விரைவாக வந்த போலீஸ் வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த பகுதி 40 கி.மீ. செல்ல வேண்டிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஆனால், கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி, போதைப்பொருள் தொடர்பான அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளார்.
எனினும், வாகனத்தில் அவசரகால விளக்குகளை எரியவிட்டபடியும், சைரன் ஒலியை எழுப்பியபடியும் அவர் சென்றார். இந்த விபத்தில், மாணவி கந்துலா மோதிய வேகத்தில் 40 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.
3 ஆண்டுகளாக இந்த வழக்கில் தீர்வு காணப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாணவிக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.262.70 கோடி) வழங்க சியாட்டில் நகரம் ஒத்து கொண்டது. இவற்றில் 20 மில்லியன் அமெரிக்க டாலர் சியாட்டில் நகர காப்பீடு வழியாகவும், மீதமுள்ள தொகையை சியாட்டில் நகரமும் வழங்க உள்ளது.
சியாட்டில் நகர வரலாற்றில் காவல் துறையில் அலட்சியம் தொடர்பான வழக்கில் பெரிய அளவில் நிவாரண பணம் வழங்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இதனை சியாட்டில் நகர வழக்கறிஞர் எரிகா இவான்சும் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த தொகை கந்துலாவின் குடும்பத்திற்கு சென்றடையும். அவருடைய மரணம் மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. அவருடைய வாழ்க்கையும் முக்கியம் வாய்ந்தது என அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.