புது டெல்லி,
சர்ச்சைக்கு உரிய இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றியும், காட்சிகளை மாற்றி அமைத்தும் வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இந்தப் படம் நாளை (25ந் தேதி) வெளியாகிறது.ஆனால் பத்மாவத் படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18ந் தேதி உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முறையிடப்பட்டது. அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு ஏற்க மறுத்துவிட்டது.
இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதன்படி அவர்கள் நடக்க வேண்டும். எங்களது முந்தைய உத்தரவை நாங்கள் மாற்ற விரும்பவில்லை என்று கூறினர் பத்மாவத் படத்துக்கு எதிராக ராஷ்ட்ரீய ராஜ்புத் கார்ணி சேனா, அகில பாரதிய சத்திரிய மகாசபை தாக்கல் செய்த வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனவே இந்தப்படம் நாளை (25ந் தேதி) நாடு முழுவதும் வெளியாகிறது.
இந்த நிலையில், பத்மாவத் படத்துக்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபத்தில் பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள் அங்கு இருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்த அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, அகமதாபாத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. #Padmaavat | #protest