கருத்தரங்கு
2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்தார். புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கம் நேற்று மாலை பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலின் கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு மத்திய மந்திரியும், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பான பட்ஜெட்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். முன்பு வருமான வரி செலுத்த நாம் அதிகாரிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அது மிகவும் சுமையாக இருந்தது. தற்போது கணினி மயமாக்கப்பட்டு இருப்பதால் வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் 75 வயதிற்கு அதிகமாக உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுடைய குழந்தைகள் அவர்களை கூடுதலாக கவனித்து கொள்வார்கள். பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் பங்குகளை மாற்றும் நடைமுறையில் முன்பு அதிக சிரமமாக இருந்தது. தற்போது அந்த நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ஜவுளி பூங்கா
மத்திய அரசு நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்காவை கொண்டு வர உள்ளது. அதில் ஒன்று புதுவையில் அமையும். சுதேசி, பாரதி, ரோடியர் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாலைகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை செய்த இடம் புதுச்சேரி.தற்போது அவை மூடப்பட்டுள்ளன. இதனை மாற்ற புதுவையில் ஜவுளி பூங்கா கொண்டு வரப்படும். அவ்வாறு வரும் போது பஞ்சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும். கடற்கரையை ஒட்டிய பகுதி புதுச்சேரி. இங்கு துறைமுகத்தையும், மீன்பிடி தொழிலையும் மேம்படுத்தி மீன் விற்பனை சந்தை அமைக்கப்படும். மருந்து தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கொண்டு வரப்படும். இங்கு உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கல்விக்காக புதுவைக்கு வரும் சூழல் உருவாகும்.
ஆன்மிக பூமி
புதுச்சேரி ஆன்மிக பூமி. இது ஆன்மிக பூமியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் புதுவை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருப்பது போல் புதுவை மாநிலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தும் புதுவைக்கு வருவது மக்கள் கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமிநாதன்
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வரப்படும். இதன்மூலம் சுமார் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் அரசின் தவறான தொழில் கொள்கையால் புதுவையில் இருந்து ஏராளமான தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளன. பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கி அந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மீண்டும் புதுவைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலந்துரையாடல்
கருத்தரங்கில் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், புதுச்சேரி வல்லுனர் குழு, தொழிற்சாலை குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகணபதி, ஸ்ரீதர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் நடந்தது. இதில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், டாக்டர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டனர். அவர்களுக்கு மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் பதில் அளித்தார்.
முன்னதாக சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அர்ஜூன் ராம் மேக்வால் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.