பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அதிகமானோர் கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டு வருகிறார்கள், இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது என ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வின்படி கர்நாடகாவில் பணக்காரர்கள் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள் எனவும் தெரியவந்து உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மே மாதம் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஜனநாயக சீர் திருத்தங்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள வேட்பாளர்களில் பிரியா கிருஷ்ணா, மந்திரி டி.கே. சிவகுமார் உள்பட 94 சதவித வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் களமிக்கப்பட்டு உள்ள 93 சதவித வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளார்கள், காங்கிரஸ் சார்பில் 220 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள 83 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள், 59 காங்கிரஸ் வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள். 83 பா.ஜனதா வேட்பாளர்களில் 58 பேர் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டு உள்ளார்கள், காங்கிரஸ் கட்சியில் 32 பேர் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள். கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் இவர்களுக்கு எதிராக உள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள 199 வேட்பாளர்களில் 41 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள். அவர்களில் மூவர் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் 154 பேர் கோடீஸ்வரர்கள் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சியின் சார்பில் களமிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவினை ஆய்வு செய்து இத்தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பணக்கார வேட்பாளர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பிரியா கிருஷ்ணா, என் நாகராஜு மற்றும் டிகே சிவகுமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். பதினேழு வேட்பாளார்கள் தங்களுக்கு சொத்து இல்லை என குறிப்பிட்டு உள்ளார்கள்.
மொத்த வேட்பாளர்களில் 447 பேர் 5 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டு உள்ளார்கள், 819 பேர் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பளவில் சொத்துக்களை கொண்டு உள்ளார்கள். தேர்தலில் போட்டியிடும் 1090 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒரு கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 2,655 வேட்பாளர்களில் 2,360 வேட்பாளர்களின் மனுக்களை ஆய்வு செய்து உள்ளது. அவர்களில் 391 பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்கள்.