அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் கைகோர்க்க பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஜேடிஎஸ் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புக்கொண்டதாகவும் பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியிருக்கிறது. அப்போது ஒப்புக்கொள்ளப்பட்ட தொகுதி பங்கீட்டின்படி, 28 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 4 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது.
முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து கடந்த ஜூலை மாதம் பேசிய தேவகவுடா, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும், ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறியிருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் தனது முடிவை மாற்றிய தேவகவுடா, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
கடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஆதரவு பெற்ற ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு தொகுதியில் வென்றன.