புதுடெல்லி,
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1986-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,437 கோடிக்கு பீரங்கிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுவீடன் ரேடியோ செய்தி வெளியிட்டது.
இதையடுத்து போபர்ஸ் பீரங்கி வாங்குவதில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான அஜய் அகர்வால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சி.பி.ஐ. எந்த மேல்முறையீட்டையும் செய்யவில்லை. எனவே, இந்த மனுவை தாக்கல் செய்ததற்கான தகுதி நிலை பற்றி அடுத்த விசாரணையின்போது மனுதாரர் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.