ஹமீர்பூர்,
உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சண்டல். கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி சிங்கிற்கும், மற்றொரு பா.ஜ.க. உள்ளூர் தலைவர் சுக்லா என்பவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், நடந்த துப்பாக்கி சூட்டில் ராஜீவ் சுக்லாவின் 2 மூத்த சகோதரர்கள் ராகேஷ், ராஜேஷ் மற்றும் மருமகன்களான அம்புஜ், வேத் நாயக் மற்றும் ஸ்ரீகாந்த் பாண்டே ஆகிய ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சண்டல் உள்ளிட்ட 10 குற்றவாளிகளையும் கடந்த 2002ம் ஆண்டு கூடுதல் செசன்ஸ் நீதிபதி விடுவித்து விட்டார். இந்நிலையில், இதனை எதிர்த்து மாநில அரசும், சுக்லாவும் தொடர்ந்து மேல்முறையீடு செய்தனர்.
இதில் கடந்த ஏப்ரல் 19ந்தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் சண்டல் மற்றும் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அவர்களை கைது செய்ய கடந்த 6ந்தேதி உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சண்டலுடன், ரகுவீர் சிங், அசுதோஷ் சிங், நசீம் மற்றும் பான் சிங் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களது தலைவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
இது தவிர உத்தம் சிங், பிரதீப் சிங் மற்றும் சஹாப் சிங் ஆகிய 3 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற நடைமுறைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவார்கள்.