லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திற்கும் சராசரியாக 50 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன 172 தொகுதிகள் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவில் வருகின்றன இந்த முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு தொகுதிகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி முடிவை எட்டியது. இதன்படி உத்தரப்பிரதேசத்தில் அப்னா தளம், நிஷாத் கட்சி ஆகியவைகளுடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து 403 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சியுடன் பாஜக கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து, அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல், நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பலர் அடங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.