தேசிய செய்திகள்

திரிபுராவில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு மோதல் முற்றுகிறது அடிதடியில் 50 பேர் காயம்; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

திரிபுராவில் பா.ஜ.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் முற்றி உள்ளது. 2 நாட்களில் அடிதடியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர். பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

அகர்தலா,

திரிபுராவில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான மாணிக் சர்கார், கடந்த 6-ந் தேதி தனது தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்றபோது, பாஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது.

பின்னர் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று பா.ஜ.க.வினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர். அடுத்த நாளில் பாஜ.க.வினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வக்கீல் வீட்டிற்கு தீ

இந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. கோமதி, செபகிஜலா மாவட்டங்களில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மோதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் இரு கட்சியினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த மோதலில், கம்யூனிஸ்டு ஆதரவாளரான வக்கீல் ரணதிர் தேப்நாத் வீட்டில் பா.ஜ.க.வினர் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி தீக்காயம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரை தீவைத்து கொல்ல முயன்றதாக கம்யூனிஸ்டு புகார் அளித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் 32 பேரின் வீடுகள் பா.ஜ.க.வினரால் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சுபாஷ் தேப்பிற்கு தலை, வயிறு, கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய மந்திரி மிரட்டல்

பா.ஜ.க.வை சேர்ந்த மந்திரி சுஷாந்தா சவுத்திரி மற்றும் மத்திய மந்திரி பிரதிமா பவுமிக் ஆகியோர் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து பேசிய பின்பு, பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.

இதேபோல பா.ஜ.க.வை சேர்ந்த மோபஸ் மியா, கம்யூனிஸ்டு தொண்டர்களால் தாக்கப்பட்டு மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க. தொண்டர்கள் கோமதி மற்றும் செபகிஜலா மாவட்டங்களின் அனைத்து எல்லையையும், உதய்பூரில் தேசிய நெடுஞ்சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து போலீஸ் குவிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம்

கடந்த 6-ந் தேதி போலீசார் கம்யூனிஸ்டு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களது தாக்குதலை தடுக்காததுதான் பிரச்சினைக்கு காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டி உள்ளது. இதற்கிடையே பா.ஜ.க.வின் கோரிக்கையை தொடர்ந்து செபகிஜலாவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இடம் மாற்றப்பட்டு உள்ளார்.

இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு