தேசிய செய்திகள்

பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது: ஆட்சி அதிகாரத்துக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேருகின்றன - அமித்ஷா தாக்கு

பா.ஜனதாவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. ஆட்சி அதிகாரத்துக்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றுசேருகின்றன என்று அமித்ஷா கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கியது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூட்டத்தில் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது ஒரு தலைவரோ, ஒரு கொள்கையோ இல்லாத வெவ்வேறான குழுக்கள் இணைந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்காக மட்டுமே ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் நாம் அந்த கட்சிகள் ஒவ்வொன்றையும் தோற்கடித்து இருக்கிறோம்.

நமது தேசியவாத கலாசாரம் தொடரவும், ஏழைகள் மேம்பாடு தொடரவும் பா.ஜனதா மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும். நமது கட்சிக்கு உலகப்புகழ் பெற்ற தலைவர் பிரதமர் நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மோடி அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக பாதுகாப்பு தொடர்பானவை, ஊழல் ஒழிப்பு, பல்வேறு நலத்திட்டங்கள் தேர்தல் வெற்றியை உறுதிசெய்யும்.

பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தான் மிகவும் முக்கியமான நாடாளுமன்ற நடவடிக்கை.

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கான வர்த்தக வரம்பு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது சிறு வியாபாரிகளுக்கு பெரிய நிவாரணம். மற்றொன்று, அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் வரி என்பது.

மோடியை குறிவைத்து காங்கிரஸ் தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அதன் தலைவர் ராகுல் காந்தி ஊழல் குற்றச்சாட்டை பொறுத்தவரை நோ பால்களாகவே வீசி வருகிறார்.

மக்கள் வலிமையான அரசுக்காகவே பா.ஜனதாவை விரும்புகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் உதவியற்ற அரசை அமைக்க விரும்புகிறது. மோடியை தவிர வேறு யாராலும் வலிமையான அரசை அமைக்க முடியாது.

நாட்டின் மேம்பாட்டிலும், கட்சியின் வளர்ச்சியிலும் ஒரு ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கான தேர்தல் இது. எதிர்க்கட்சிகளுக்கு மோடியை தோற்கடிப்பது இயலாத காரியம் என்பது தெரியும். மக்கள் தொடர்ந்து மோடி பின்னால் பாறைபோல் உறுதியாக இருப்பார்கள். அவரது தலைமையின் கீழ் பா.ஜனதா மீண்டும் நிச்சயம் வெற்றிபெறும்.

பலவகையான போர்கள் இருக்கின்றன. சில வெற்றி அல்லது தோல்வியில் நின்றுவிடுகின்றன. மற்ற சில 10 ஆண்டுகளாகவும், சில நூற்றாண்டுகளாகவும் தொடருகின்றன. 2019 போரும் இதுபோன்ற ஒன்றுதான் என நான் கருதுகிறேன். இது மூன்றாம் பானிபட் போர் போன்றது. இன்றைய சூழ்நிலைக்கு இதுதான் வரலாற்றில் உள்ள சிறந்த உதாரணம்.

6 மாநிலங்களில் மட்டுமே நாம் ஆட்சியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வந்தோம். இப்போது பா.ஜனதா 16 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மோடி அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தென்னிந்தியாவிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வரும். கேரளாவில் பா.ஜனதா அரசு அமைப்போம்.

1987-ம் ஆண்டில் இருந்து எனக்கு மோடியை தெரியும். அவரது தலைமையின் கீழ் ஒரு தேர்தலில் கூட தோல்வி அடையவில்லை. உத்தரபிரதேசத்தில் 50 சதவீதம் ஓட்டுக்கு மேல் பெற்று கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெல்வோம். சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் ஒரு நாளும் ஒன்றுசேராது. ஆனால் இப்போது பா.ஜனதா என்ற பயம் காரணமாக ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள்.

அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டவே பா.ஜனதா விரும்புகிறது. ஆனால் இப்போது பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதில் தீர்ப்பு வெளியாவதற்கு காங்கிரஸ் தடைகளை உருவாக்குகிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை