டேராடூன்,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளன. தமிழக அரசும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.
டெல்லியில் தேவைப்பட்டால் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவிப்போம் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த நிலையில், உத்தரகாண்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இன்று வரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதார துறை இன்று தெரிவித்து உள்ளது.
டேராடூனில் சந்தேகத்திற்குரிய வகையிலான 6 பேரிடம் இன்று பரிசோதனை நடந்தது. அதில், 5 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இதுவரை (22ந்தேதி) டேராடூனில் மொத்தம் 53 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதியாகி உள்ளது. அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
இதுதவிர, நைனிடால் மற்றும் உத்தம்சிங் நகரில் தலா ஒருவருக்கு பாதிப்பும், தலா ஒருவர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால், உத்தரகாண்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மொத்த பாதிப்பு 55 ஆகவும், மொத்த உயிரிழப்பு 7 ஆகவும் உள்ளது.