உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 7434 மீட்டர் உயர நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக சென்றார். கடந்த 13-ந்தேதி முன்சியாரி பகுதியில் இருந்து மலையேற்றம் சென்ற அவர்கள் 31-ம் தேதி முகாமிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர்கள் மாயமானதாக பித்தோரகார்க் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை தேடுவதற்கு மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பனிச்சரிவு ஏற்பட்டுள்ள மலைப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நந்தா தேவி சிகரம் பகுதியில் 5 மலையேற்ற வீரர்களின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அவர்கள் இரவு தங்க முகாம் அமைத்துள்ள பகுதியின் அருகே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ளவர்களின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.