பெங்களூரு,
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிகின்றன. நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் மழையால் அந்த மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மழையால் உயிரிழந்தவர்களுக்கு தனது துக்கத்தை தெரியப்படுத்தினார். மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார். கேரள மாநில அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பில் இருக்கும்படி தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.