தேசிய செய்திகள்

நாடாளுமன்ற இரு அவைகளும் 12–வது நாளாக முடங்கியது

காவிரி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் 12–வது நாளாக முடங்கியது. #Parliament

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை இல்லை என சபாநாயகர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு 5ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியால் தொடர்ந்து எந்த அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மக்களவை நேற்று கூடியது. அப்போது ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச எழுந்தார். ஆனால் அவரை பேச விடாமல் வங்கி மோசடி தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சியினரும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினரும் அமளியில் ஈடுபட்டனர்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சுஷ்மா சுவராஜூம், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் வலியுறுத்தினர். இதை ஏற்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமைதியாக அமர்ந்தனர். ஆனால் மற்ற கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டே இருந்தனர். இந்த அமளிக்கு இடையே சுஷ்மா தன்னுடைய அறிக்கையை வாசித்தார்.

பின்னர் சபாநாயகர் பேசுகையில், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலை தற்போது அவையில் இல்லை. எம்.பி.க்கள் அமளியால் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறி அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இதே நிலை தான் நீடித்தது. அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. குலாம் நபி ஆசாத் எழுந்து பேசுகையில், வங்கி மோசடி விவகாரம், காவிரி பிரச்சினை, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த அவை சுமுகமாக நடைபெறும், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

இதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், விஜய் கோயல் ஆகியோர் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க இந்த அவை தயாராக உள்ளது என்றனர். எனினும் தொடர் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பல்வேறு கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 12வது நாளாக முடங்கியது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமும் 3வது நாளாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது