தேசிய செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பெண் - முழங்கால் அளவு பனியில் 3 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் தங்தார் . அப்பகுதியில் 2 முதல் 3 அடி உயரம் வரை பனி பெய்து, சாலைகள் முழுவதும் மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 26 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவசர உதவிக்காக அவரது கணவர் அருகிலிருந்த வில்காம் ராணுவ முகாமை தொடர்புகொண்டார்.

தகவல் கிடைத்ததும், ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், அந்தப் பெண்ணை ஸ்டிரெச்சரில் பாதுகாப்பாக வைத்து, முழங்கால் அளவு பனியை கடந்து சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரம் தங்களின் தோள்களில் சுமந்து சென்றனர்.

பின்னர், அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் வாகனம் வரக்கூடிய பிரதான சாலைக்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT