கொல்கத்தா,
கொல்கத்தாவில் இன்று மாலை பழமையான மெஜெர்காத் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தீயணைப்பு படை, மீட்பு குழு மற்றும் போலீஸ் மீட்பு பணியை தீவிரமாக தொடங்கியது. மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கிடையே புது பாலம் அப்பகுதியில் கட்டுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மீட்பு பணியின் போது காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தீவிரமாக மற்றொரு பகுதியில் மீட்பு பணிகள் நடக்கிறது.
இதற்கிடையே அப்பகுதியிலே ராணுவ முகாம் உள்ளது. அங்கிருந்து மீட்பு பணிக்கு வீரர்கள் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதி எங்கள் பகுதிக்கு மிகவும் அருகாமையில் இருந்தாலும் மீட்பு பணிக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, இருப்பினும் ராணுவம் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணை
இப்போது மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் உள்ளார். விமானம் இல்லாத காரணத்தினால் இரவே கொல்கத்தாவிற்கு திரும்ப முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம், நாங்கள் அங்கு பணியிலிருக்கும் மீட்பு குழுவிடம் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறோம். எங்களால் முடிந்தவரையில் அங்கு விரைவாக செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறோம். இப்போது விமானம் கிடையாது, எனவே திரும்ப முடியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது, விரிவான விசாரணை நடத்தப்படும். இப்போது எங்களுடைய முழு கவனமும் மீட்பு பணியின் மீதே உள்ளது, மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதற்கிடையே விபத்து நேரிட்ட பகுதிக்கு மாநில அமைச்சர்களும் சென்றுள்ளார்கள்.
அனைவரும் மீட்பு
மேற்கு வங்காள மாநில அமைச்சர் பிர்காத் ஹகிம் பேசுகையில், பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள், என்றார்.
பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இப்போது எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது. இருப்பினும் தேடுதல் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும் தகவலுக்கு காத்திருப்போம், என குறிப்பிட்டுள்ளார்.
5 பேர் உயிரிழப்பு
விபத்து நேரிட்ட இடத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 250 அடி வரையில் பாலம் இடிந்து விழுந்து உள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலை மோசமாக உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.