தேசிய செய்திகள்

டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' ஒளிபரப்பு - பினராயி விஜயன் கண்டனம்

டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.

இந்த நிலையில், டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரிவினையைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை டிடிநேஷனல் ஒளிபரப்புவது கடும் கண்டனத்துக்குரியது.

அரசு தொலைக்காட்சி பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை ஒளிபரப்பும் முடிவை திரும்ப பெற வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்" என்று தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்