புதுடெல்லி,
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் நல்லுறவின் ஒரு பகுதியாக மைத்ரீ எக்ஸ்பிரெஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகர் மற்றும் வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவை இணைக்கிறது. வாரத்திற்கு 4 நாட்கள் இந்த ரெயில் சேவை செயல்படுகிறது.
டாக்கா நோக்கி சென்ற எக்ஸ்பிரெஸ் ரெயிலில், மேற்கு வங்காளத்தின் கெடி நகரில் இருந்து வங்காளதேசத்திற்குள் நுழையும் வரை பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 99வது பட்டாலியனை சேர்ந்த கான்ஸ்டபிளான வி. பவி என்பவர் ரெயிலில் பயணம் செய்த வங்காளதேச பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி கொல்கத்தாவுக்கு ரெயில் வந்தவுடன் நிலைய மேலாளரிடம் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் பவி ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய புகார் தீவிரமுடன் கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பாதித்து விடும் என மூத்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
#Dhaka #BSF