ஸ்ரீநகர்,
ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ். புராவின் அர்னியா செக்டாரில் நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடும் துப்பாக்கி சூடு மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது. இன்று அதிகாலை வெளியாகி தகவலின்படி அப்போது வரையில் சண்டை நடைபெற்றது என தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரிஜேந்திர பகதூர் சிங் எனவும், உத்தரபிரதேச மாநிலம் பாலியாவை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ஜம்மு பிராந்திய எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி தர்மேந்தர் பாரீக் பேசுகையில், அதிகாலை 12.20 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் பிரிஜேந்திர பகதூர் சிங் காயம் அடைந்தார். பகதூர் சிங்கின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து இருந்தது, அவரை காப்பாற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே உயிரிழந்துவிட்டார்., என கூறிஉள்ளார். இருதரப்பு இடையேயும் தொடர்ச்சியாக துப்பாக்கி சண்டை நள்ளிரவை தாண்டி நீடித்தது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.