புதுடெல்லி,
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), எம்.டி.என்.எல். (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்) ஆகியவை தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இந்த நிலையில் அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு, இணைய இணைப்பு மற்றும் குத்தகை அடிப்படையிலான இணைப்புகளை மேற்கண்ட பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டும் என்று, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.