புதுடெல்லி,
இந்தியாவில் விரைவில் உள்நாட்டு 4-ஜி தொலை தொடர்புச்சேவை (நான்காம் தலைமுறை தொலைதொடர்புச்சேவை) பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான பணிகளில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். களம் இறங்கி உள்ளது.
இதுபற்றி நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
4-ஜி தொலைதொடர்புச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது. இந்த சேவை இந்திய என்ஜினீயர்கள், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இது உலகளாவிய பாராட்டை பெற்றுள்ளது.
இந்த 4-ஜி தொலைதொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்கிறது.
உடனடியாக 6 ஆயிரம் டவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. அடுத்து 6 ஆயிரம் டவர்களுக்கும், இறுதியில் 1 லட்சம் டவர்களும் அமைக்கப்படும்.
5-ஜி தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அது அடுத்த சில மாதங்களில் தயாராகி விடும்.
ரெயில்களில் 4-ஜி இணையதள சேவை பற்றி கேட்கிறீர்கள். ரெயில் வேகம் 100 கி.மீ.வுக்கு அதிகமாக இருந்தால் 5-ஜி நெட்வொர்க் தேவை. 4-ஜி நெட்வொர்க்கில் இடையூறுகள் ஏற்படும். இது தொழில்நுட்ப மதிப்பீட்டின் காலம் ஆகும். 5-ஜி தயாராகி வருவதால், அது விரைவில் கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.