புதுடெல்லி,
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மாணவர்கள் மற்றும் இந்தியாவில் கல்வித்துறைக்கு அருண் ஜெட்லி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார். 2022-ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் உள்கட்டமைப்பு மற்றும் முறைகளை புதுப்பித்தல் என்ற திட்டம் ரூ. 1 லட்சம் கோடியில் முன்னெடுக்கப்படும் என அருண் ஜெட்லியின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவம் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி தொடர்பான கட்டமைப்பில் முதலீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தேசத்தில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும் வகையில் நிதிமந்திரி ஜெட்லியின் பட்ஜெட் அமைந்து உள்ளது. 2022-ம் ஆண்டிற்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் நவோதயா பள்ளியின் வரிசையில் ஏகலைவா மாடல் முன்மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்படும் தொடங்கப்படும். 50 சதவிதத்திற்கு மேலாக எஸ்டி பிரிவு மக்கள் வாழும் அல்லது 20 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் இத்தகையை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 20 லட்சம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உயர் கல்வியில் கணிசமான முதலீடுகளை முன்மொழிந்து உள்ளார். மத்திய அரசு இவ்வருடம் பிரதமர் ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கும். இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் பிடெக் மாணவர்களில் 1000 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பிரதமரின் ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.யில் பிஎச்டி படிப்பதற்கு வசதியளிக்கும் வசதிகள் செய்துக் கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடுமுழுவதும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். மாணவர்கள் கல்வி கடன் மீதான வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தனர், ஆனால் அதுதொடர்பாக எந்தஒரு அம்சமும் இடம்பெற வில்லை. சிறந்த முறையில் நவீன கல்வி என்ற இலக்குடன் பள்ளி கல்வி தரம் உயர்த்தப்படும். ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த பிட் வகுப்புகள் தொடங்கப்படும். கல்வியின் தரத்தை அதிகரிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். பள்ளிகளில் இனிமேல் கரும்பு பலகைக்கு பதில், டிஜிட்டல் பலகையாக மாறும் விதத்தில் டிஜிட்டல் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.