புதுடெல்லி,
2018-ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தொடங்கியது. இக்கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெறுகிறது. இதில் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்காலக்கட்டத்தில் மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவை மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பாராளுமன்ற இருஅவைகளும் கடந்த மாதம் 9ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆவது அமர்வு இன்று (மார்ச் 5) தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்த அமர்வில், பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் நபர்களின் சொத்துகளை முடக்க வழிவகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் முத்தலாக் தடை மசோதா, ஒபிசி ஆணையத்துக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒபிசி மசோதா ஆகியவற்றை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் மத்திய பாஜக கூட்டணி அரசு உள்ளது.
இதில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றுவதற்கு, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதனால், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். இதனால் மாநிலங்களவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாராளுமன்ற முதல் அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, அது நிறைவேற்றப்பட இருக்கிறது.
வைர வியாபாரி நீரவ் மோடியும் ரூ.12,700 கோடி மோசடியில் ஈடுபட்டிருப்பதை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால், பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.