புதுடெல்லி,
மத்திய மந்திரி சபை குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், ரயில்வே மந்திரி பியூஸ் கோயல், பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான், ஆகியோர் கேபினட் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழுவில் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு விவகாரத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கேபினட் குழுவில், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஊரகவளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரியும் கேபினட் குழுவில் இடம் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் நீடிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்தர் அப்பாஸ் நக்விக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார்.
அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஸ் கோயல் இடம் பெற்றுள்ளனர். பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் தர்மேந்திர பிரதானும் இடம் பெற்றுள்ளார். அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு கூடும். இந்த குழு கிட்டதட்ட அனைத்து வாரங்களும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மந்திரி உமா பாரதி கேபினட் குழுவில் அங்கம் வகிக்கவில்லை.