விருப்ப ஓய்வு
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.அதில், மத்திய பொதுத்துறை நிறுவனமான கைவினை மற்றும் கைத்தறி ஏற்றுமதி கழகத்தை மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் இருந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான வருமானத்தை கூட ஈட்டவில்லை. நிறுவனத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அதை மூட முடிவு செய்யப்பட்டது.
நிறுவனத்தில் பணியாற்றும் 59 நிரந்தர ஊழியர்களும், 6 நிர்வாக பணியாளர்களும் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு துறையில் முதலீட்டுக்கான நிதியை திரட்ட வளர்ச்சி நிதி நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு செயல்வடிவம் அளிக்கும்வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், மாலத்தீவு விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.