பிரமாண்ட மாநாடு
குருப சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி காகினெலே கனககுரு பீடத்தின் மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி தலைமையில் கடந்த ஜனவரி 15-ந் தேதி பெங்களூருவை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அந்த பாதயாத்திரை 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவை வந்தடைந்தது. இங்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குருப சமுகத்தின் பிரமாண்ட மாநாடு பெங்களூரு அருகே உள்ள சர்வதேச கண்காட்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி தலைமை தாங்கினார். இதில் அந்த சமூகத்தை சேர்ந்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், மந்திரி ஈசுவரப்பா பேசியதாவது:-
பழங்குடியினர் பட்டியல்
கர்நாடகத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த குருப சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குருப மக்களையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். இட ஒதுக்கீட்டு விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறிய கருத்து, சரியானது. இட ஒதுக்கீடு நடைமுறை சட்டப்படி நடைபெற வேண்டும். நான் அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்க மாட்டேன்.
மந்திரிசபையில் குருப சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். குருப சமூகத்தில் நிறைய ஏழைகள் உள்ளனர். அவர்களை மேலே கொண்டுவர வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
நமது உரிமை
குருப மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மடாதிபதி பாதயாத்திரை மேற்கொண்டார். நமது உரிமையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் நமது கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. 340 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு ஈசுவரப்பா பேசினார்.
இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான குருப இன மக்கள் கலந்து கொண்டனர். பலர் தங்களின் பாரம்பரிய உடைகளில் வந்து பங்கேற்றது, அவர்ளின் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.