புதுடெல்லி,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த அனில் மாதவ் தவே மரணம் அடைந்ததாலும் மற்றும் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் ஏற்பட்ட காலி இடங்கள் இன்னும் நிரப்பப் படவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த ரெயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவும் ராஜினாமா செய்ய முன்வந்து உள்ளார்.இதனால் பிரதமர் மோடி தனது மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை ராஜாங்க மந்திரி (தனி பொறுப்பு) ராஜீவ் பிரதாப் ரூடி, மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க மந்திரி மகேந்திர நாத் பாண்டே ஆகிய இருவரும் திடீரென்று நேற்று இரவு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.பிரதமர் மோடி விரைவில் மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதால், அதற்கு வசதியாக ராஜீவ் பிரதாப் ரூடியும், மகேந்திர நாத் பாண்டேவும் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
மேலும் சில மந்திரிகள் ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு மந்திரி சபை மாற்றியமைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். மந்திரி சபை மாற்றியமைக்கப்படுவதால், புதிய மந்திரிகள் பதவி ஏற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.