கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான மொகரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜாவும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது.
இதன் காரணமாக மதம் சார்ந்த மோதல்கள் தலை தூக்கும் என்ற காரணத்திற்காக துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அரசின் இந்த முடிவு இந்து மதத்தினரின் சம்பிரதாயத்திற்கு தடை போடுவதாகவும், முஸ்லீம் மதத்தினரின் வாக்குவங்கியை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
துர்கா சிலை கரைப்பு விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நேற்று மம்தா பானர்ஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், மேற்கு வங்காள அரசின் தடையுத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மொகரம் ஊர்வலம் மற்றும் துர்கா பூஜை நிகழ்ச்சி ஊர்வலமும் தனித்தனியான பாதைகளில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், நள்ளிரவு 12 மணி வரை அனைத்து தினமும் துர்கா சிலைகளை கரைக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.