தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இஸ்லாமியர்கள் இணைய முடியுமா? - மோகன் பகவத் பதில்

பாரத மாதாவின் குழந்தைகளாக தங்களை கருதுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணையலாம் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சங் பரிவாரின் 100 ஆண்டு பயணம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இஸ்லாமியர்கள் இணையலாமா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்;-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது உறுப்பினர்களை சாதி, மதத்தால் வேறுபடுத்தி பார்க்காது. ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட தேசிய அடையாளத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணுகுமுறை வேரூன்றி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்து சமூகத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என நிறைய பேர் வருகிறார்கள்.

ஆனால் எண்ணிக்கையை நாங்கள் கணக்கில் கொள்வதில்லை. வருபவர்களிடம் நீங்கள் யார்? என்று நாங்கள் கேட்பதில்லை. நாம் அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள். இவ்வாறுதான் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பிராமணர்களுக்கோ, அல்லது வேறு எந்த சாதியினருக்கோ அனுமதி இல்லை. அதே போல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் அனுமதி இல்லை. இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

எனவே கிறிஸ்தவர், இஸ்லாமியர் அல்லது வேறு அடையாளத்துடன் வருபவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு வரும்போது தங்களிடம் இருக்கும் பிரிவினைகளை வெளியேற்றி விட்டு வரலாம். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களை பாரத மாதாவின் குழந்தைகளாகவும், பரவலாக்கப்பட்ட இந்து சமுதாயத்தின் அங்கமாகவும் கருதினால் நிச்சயாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து