தேசிய செய்திகள்

கல்வியில் இட ஒதுக்கீடு முறைக்கு காலக்கெடு நிர்ணயிக்க மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

டெல்லியை சேர்ந்த மருத்துவர் சுபாஷ் விஜய்ரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தகுதி வாய்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதி குறைந்தவர்களுக்கு கிடைத்து வருகிறது.

இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்தப்படும் தேர்வு முறையால் மாணவர்களின் திறமை மேம்படும், நாடு முன்னேறும்.நல்ல நிலையில் உள்ள மருத்துவர்களும், வழக்கறிஞர்களும், பொறியாளர்களும் கூட உயர்கல்வி பயில இட ஒதுக்கீடு முறையை வீம்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். எனவே இட ஒதுக்கீடு முறை காலக்கெடு விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இட ஒதுக்கீடு முறைக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும் வலியுறுத்தியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நேற்று பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இட ஒதுக்கீடு முறைக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தவில்லை. அது ஒரு நீதிபதியின் கருத்து என தெளிவுபடுத்தினர்.