புதுடெல்லி
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.
இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
அமரிந்தர் சிங் பிற்பகலில் சண்டிகரில் இருந்து டெல்லி செல்கிறார். டெல்லியில் பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு அமரிந்தர் சிங் பா.ஜ.க.வில் சேருவார் என்ற தீவிர யூகங்களைத் தூண்டியுள்ளது.மேலும் கேப்டன் அமரிந்தர் சிங் மத்திய விவசாய மந்திரியாக பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரிசபையில் சேர்க்கபடலாம் என்ற யூகங்களும் வெளியாகி உள்ளன.
கேப்டன் அமரிந்தர் சிங் பா.ஜ.க.வில் சேர மறுத்தால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க பா.ஜ.க உதவக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது. இதன் மூலம், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக அமரிந்தர் சிங் இணைய வற்புறுத்தப்படுவார். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தகவல்கள் எதுவும் இல்லை, இவை தற்போது வரை யூகங்கள் மட்டுமே.