தேசிய செய்திகள்

ஒடிசாவில் ரூ.95 லட்சம் பணமோசடி செய்ததாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு பதிவு

நிலம் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாகவும், பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா தாஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில அரசின் உள்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா தாஸ். இவர் கட்டாக் மாவட்ட மேம்பாட்டு ஆணைய (CDA) திட்டப் பகுதியில் நிலம் தருவதாக வாக்குறுதியளித்து, மாற்றுத்திறனாளியான கமல் குமார் பவ்சிங்கா என்பவரிடம் இருந்து 95 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கமல் குமாரிடம் பணத்தை பெற்ற அர்ச்சனா தாஸ், அவர் கூறியபடி நிலத்தை வழங்கத் தவறியதாகவும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கமல் குமார் தனது பணத்தை திருப்பி கேட்டபோது அவருக்கு அர்ச்சனா தாஸ் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்டாக் காவல் நிலையத்தில் கமல் குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த புகார் மீதான விசாரணைக்கு அர்ச்சனா தாஸ் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்கள்/ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான விதிகளின்படி, அர்ச்சனா தாஸ் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மாநில உள்துறை மற்றும் பொது நிர்வாகத் துறைக்கு காவல்துறை ஆணையரகம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.