புதுடெல்லி,
மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்களை தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சில மருத்துவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தொடர்பாக 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அடுத்த கல்வியாண்டில் இதனை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், மருத்துவப் படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவின் மீது மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டு என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.