புதுடெல்லி,
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்றம் வளாகத்தில் காந்தி நிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுக எம்.பிக்கள் பாராளுமன்ற வளாத்தில் 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் போராடும்போது நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றியது கருப்புதினமாகும். மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் கோரிக்கை விடுத்தது பற்றி பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எந்த பதிலும் தராமல் எங்களின் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க தவறும்பட்சத்தில் மக்களின் உணர்வுக்கு ஏற்ப போராட்டம் விரிவடையும். மக்கள் எதிர்க்கும் நியூட்ரினோ திட்டத்தை அ.தி.மு.க எதிர்க்கும் என கூறினார்.