புதுடெல்லி,
தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இந்த காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு வழங்கியது. அந்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே மத்திய அரசுக்கு 6 ஆண்டுகள் ஆனது. 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை.
அதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இந்த அமைப்புகளை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதன்பின்னர் அதே ஆண்டின் மே மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் முக்கிய கடமை, தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறபோது தீர்வு காண வேண்டும் என்பதாகும்.
இந்த ஆணையத்தில் சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசின் பிரதிநிதியும் உறுப்பினர்கள் ஆவர்.
இந்த ஆணையத்தின் கூட்டம் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை திடீரென நீர்வள அமைச்சகத்தின்கீழ் (ஜலசக்தி அமைச்சகம்) கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதே போன்று பிற நீர் மேலாண்மை ஆணையங்களும் மத்திய ஜலசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முடிவுகள் ஒரு வழக்கமான நடைமுறை என்றும், தன் அலுவல் ஒதுக்கீடு பற்றி ஆணையம் மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய ஜலசக்தி அமைச் சகத்தின் கீழ், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டு வரப்பட்டாலும் அதன் செயல்பாட்டு சுதந்திரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.