புதுடெல்லி
கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளர்களின் விருப்பம் இன்றி கட்டாயப்படுத்தி சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வழிகாட்டி குறிப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி சேவைக்கட்டணம் கொடுப்பது வாடிக்கையாளரின் தன் விருப்பம் மட்டுமே. இருப்பினும் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சேவைக்கட்டணம் விதிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பல ஊடகங்களும் இது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.
மாநில அரசுகளும், ஹோட்டல் சங்கங்களும் இவ் வழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டப்பட்டுள்ளன. நுகர்வோருக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் சேவைக்கட்டணம் வாடிக்கையாளர் விரும்பினால் கொடுக்கலாம் என்றும் ஹோட்டல்களும், ரெஸ்டாரண்டுகளும் கட்டாயப்படுத்தி சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பஸ்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.