திருவனந்தபுரம்/கொல்கத்தா,
இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் 83வது பாட்டாலியன் படைப்பிரிவின் கமாண்டர் ஜிபு டி மாத்யூவை சிபிஐ அதிகாரிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் கைது செய்தனர். ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கியதும் அவரை சிபிஐ அதிகாரிகள் 7 பேர் சுற்றி வளைத்தனர். அவர் கொண்டுவந்த பை திறக்க அதிகாரிகள் கேட்டபோது மறுத்துவிட்டார், இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை அப்பகுதியில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கினர். அவர் வைத்திருந்த பையில் ரூ. 45 லட்சம் இருந்தது தெரியவந்தது, அதனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரி ஜிபு டி மாத்யூவை கைது செய்தனர்.
இப்போது இந்தியா - வங்காளதேசம் எல்லையில் கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு பகுதியாக ரூ. 45 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார், அதனால் கைது செய்யப்பட்டு உள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை. எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்பு படையின் கமாண்டர் கடத்தல்காரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கினார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்து உள்ளது.