புதுடெல்லி,
இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மொயின் குரேஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. இதில் திடீர் திருப்பமாக, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ.யில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, இதுவரை இல்லாத நடவடிக்கையாக கருதப்படுகிறது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையிலான பனிப்போரில் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஊழல் புகாரை சுமத்தினர். இது தொடர்ந்த நிலையில் பிரதமர் மோடியும் இருவருக்கும் சம்மன் விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியது. ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான வழக்கில் கைது நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரம் பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளையும் அலோக் வர்மா எடுத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.