தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு சி.பி.ஐ. சோதனை மிரட்டல்; கெஜ்ரிவால் பேச்சு

சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என கடந்த 3 நாட்களாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், ராஜ்காட் பகுதியில் 97 மின்சார பேருந்துகளை மாநிலத்திற்கு இன்று அர்ப்பணித்து, கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேருந்துகளில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அரசு அறிவித்து உள்ளது. பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவசரகாலங்களில் அழுத்துவதற்கான பட்டன்களும் இணைக்கப்பட்டு உள்ளன. ஜி.பி.எஸ். வசதியுடன், மாற்று திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையிலும் பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்பு கெஜ்ரிவால் நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த 2 முதல் 3 நாட்களாக சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன.

கட்சியை விட்டு விலகும்படியும், அதற்காக பணம் அளிக்கப்படும் என ஆசை வார்த்தைகளும் கூறப்பட்டு வருகின்றன. இதனை எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது மிக தீவிர விசயம். இதனை பற்றி கட்சியின் அரசியல் விவகார கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இதற்காக இன்று மாலை 4 மணியளவில் ஒரு கூட்டம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 19-ந்தேதி இதன்மீது நடவடிக்கை எடுக்கும் ஒரு பகுதியாக மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அமைப்பு அதிரடி சோதனையிலும் ஈடுபட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்