புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு எதிராக நேற்று முன்தினம் ப.சிதம்பரம் தரப்பில் எதிர் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் குமார் கைத் முன்னிலையில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான வாதம் 3-வது நாளாக தொடர்ந்தது.
இதில் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் முன்வைத்த வாதத்தில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன பங்குகளில் அன்னிய முதலீடு செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது. அப்படியெனில், இங்கு எந்த இடத்தில் சட்டவிரோத பரிமாற்றம் நடந்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரம் தரப்பில் கொடுக்கும் விவரங்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஏனெனில் இந்த தகவல்களின் ஆதாரம் குறித்து அறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பினர் தங்கள் வாதத்தில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியபோது சி.பி.ஐ. எதிர்த்த காரணம், அவர் வெளிநாடு தப்பிச்சென்று விடுவார். ஆதாரங்களை கலைக்க முற்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இங்கு எந்த பணமும் கையாடல் இல்லை. மாறாக முதலீடுதான் இந்த நாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் அவர் எந்த ஆதாரத்தையும் கலைக்கவில்லை. இந்த வழக்கில் எல்லோரும் வெளியில் இருக்கும்போது ஏன் ப.சிதம்பரம் மட்டும் சிறையில் இருக்க வேண்டும்?. ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியது தொடர்பாக யாரும் வழக்கு தொடரவில்லை.
கணக்கில் காட்டாத வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் ப.சிதம்பரம் அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஒப்புதல் கையெழுத்திட்ட அதிகாரிகள் அனைவரும் வெளியில் இருக்கும்போது ப.சிதம்பரம் மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும்?. அவருக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் இதுவரை சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை.
ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு முக்கிய நபர் தொடர்புடைய வழக்கு என்று அழைக்கப்படுகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றத்தின் தீவிரம் என்ன? ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்க்கும் காரணங்களை ஏற்க முடியாது. சொந்த மகளை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்றச்சாட்டை 10 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண் தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கரராமன் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்தார்.