புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் விஹார் டர்வி. இவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., மத்திய வெளியுறவு அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகம் ஆகியவற்றிடம் சில தகவல்கள் கேட்டு விண்ணப்பித்தார்.
வங்கி மோசடியில் ஈடுபட்டு, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி தலைமறைவானவர்கள் விவரம், அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட பண விவரம், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் ஏற்பட்ட சட்ட, பயண செலவு விவரம், தேடப்படும் நபர் என்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் எண்ணிக்கை, அதற்கு சம்பந்தப்பட்ட வெளிநாடுகள் அளித்த பதில் ஆகிய தகவல்களை அளிக்குமாறு அவர் கோரி இருந்தார்.
ஆனால், இந்த தகவல்களை அளிக்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விஹார் டர்வி கூறியதாவது:-
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதையோ, வழக்கு நடத்துவதையோ பாதிக்கும் தகவல்களை அளிக்க தகவல் உரிமை சட்டத்தின் 8(1)(எச்) பிரிவு, சி.பி.ஐ.க்கு விலக்கு அளித்துள்ளதாகவும், எனவே, அந்த தகவல்களை அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் கூறி, தகவல்களை அளிக்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது. மேலும், தகவல் உரிமை சட்டத்தின் 24-வது பிரிவும், தகவல்களை அளிக்க தனக்கு விலக்கு அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதுபோல், நான் கேட்ட தகவல்கள், குடியேற்றப்பிரிவு சம்பந்தப்பட்டது என்பதால், அப்பிரிவை நிர்வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எனது மனுவை மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைத்து விட்டது.
மத்திய நிதி அமைச்சகமும் எனக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியநிலையில், இந்த மறுப்பை சி.பி.ஐ. வெளியிட்டுள்ளது.