பணத்துக்கு துப்பாக்கி லைசென்ஸ்...
ஜம்மு-காஷ்மீரில் 2012-16 காலகட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள், குற்றப்பின்னணி கொண்ட பலருக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போலி ஆவணங்களின் அடிப்படையில் துப்பாக்கி லைசென்சுகளை சட்டவிரோதமாகவும், தாராளமாகவும் வழங்கி உள்ளனர்.இப்படி ஆயிரக்கணக்கானோருக்கு லைசென்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அறியவந்தபோது, சி.பி.ஐ. விசாரணைக்கு அப்போதைய கவர்னர் என்.என்.வோரா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான குப்வாரா மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர்களான ராஜீவ் ரஞ்சன், இத்ரித் உசேன் ரபிக் ஆகிய 2 பேரையும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது.
40 இடங்களில் சோதனை
இந்த நிலையில் காஷ்மீரிலும், டெல்லியிலும் துப்பாக்கி லைசென்ஸ் முறைகேட்டில் தொடர்புடையவர்களுடைய 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி அதிரடி சோதனைகளை நடத்தினர். அதிரடி சோதனை நடத்தப்பட்ட இடங்களில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பழங்குடியினர் விவகாரத்துறை செயலாளர் சாகித் இக்பால் சவுத்ரியின் ஸ்ரீநகர் இல்லம் மற்றும் நீரஜ்குமார் இல்லம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. காஷ்மீரில் சோதனை நடத்தப்பட்ட ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், ரஜவுரி, அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட இடங்களில், முறைகேட்டில் தொடர்புடைய குறிப்பிட்ட
நபர்களின் இல்லங்களுக்கு செல்கிற சாலைகள் சீல் வைக்கப்பட்டிருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனைகளில் சிக்கியது என்ன என்பது குறித்து தெரிய வரவில்லை.