புதுடெல்லி,
கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 10-ம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன.12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
கடந்த 26-ந் தேதி, 12-வது வகுப்புக்கு பொருளாதார தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. ஆனால், அதை சி.பி.எஸ்.இ. மறுத்தது. தாங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சரிபார்த்து விட்டதாகவும், வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தது.இந்நிலையில், நேற்று 10-ம் வகுப்பு இறுதி தேர்வாக கணித தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.
ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த தேர்வின் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. இதை சி.பி.எஸ்.இ.யும் உறுதி செய்துள்ளது. மேற்கண்ட 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார், தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் ராஜேந்திர நாகர் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக ராஜேந்திர சாகர் இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், மேற்கொண்டு தகவல்களை திரட்ட தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.