தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.

வினாத்தாள் வெளியான விவகாரம் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச்சேர்ந்த அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - வினாத்தாள் வெளியானதால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாணவர்களுக்கு எந்த சிரமும் ஏற்படாதிருக்க அனைத்து தேர்வுகளையும் மீண்டும் ஒரு முறை நடத்த வேண்டும். வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவில்லை. எனினும், ஒருவாரம் அல்லது அதற்கு மேலும் சில தினங்களில் இந்த மனு விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்றதொரு மனு ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் கொச்சினைச்சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது நினைவு கொள்ளத்தக்கது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி