பனாஜி,
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. அவர் பேசும்போது, அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கோவாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, மத்திய பட்ஜெட்டை நான் பார்த்தேன். முதலில், கோவாவுக்கு அதில் எதுவும் இல்லை.
மத்திய அரசு கோவாவை முற்றிலும் மறந்து விட்டது. கோவாவுக்கோ அதன் மக்களுக்கோ எதுவும் இல்லை என குறையாக கூறினார். தேசிய அளவில் பார்க்கும்போது, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள திட்டங்கள் இல்லை என்றார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த வலுவான திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும் என்றார். 15 ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு உள்ளது. இந்த 15 ஆண்டுகளில் கோவாவை அவர்கள் சூறையாடி விட்டனர். எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து விட்டது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.