தேசிய செய்திகள்

‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பொருள், புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு என்பதாகும்.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், அவரது மனைவி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), மனோகர் லால் (அரியானா), திரிவேந்திர சிங் ரவத் (உத்தரகாண்ட்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். திரளான வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப்பேசியபோது கூறியதாவது:-

இப்போது நாங்கள் சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும். இது அனைவருக்கும் மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும்.

விசா, பியோ (இந்திய வம்சாவளி அடையாள அட்டை), ஓ.சி.ஐ. (வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை) ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் சமூக பாதுகாப்பு முறையுடன் இணைப்போம். இதன்மூலம், ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும்.

பாஸ்போர்ட் முறையுடன் விசா வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மின்னணு விசா, நிறைய உதவி உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும், அங்கு வாழ்கிற குடும்பங்கள் இந்தியா வந்து செல்வதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இது இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு உதவும்.

முன்பெல்லாம், இந்தியா மாறாது என்று மக்கள் கூறி வந்தனர். இந்த மனநிலையை மாற்றுவதற்கு கடந்த 4 ஆண்டுகளில் எங்கள் அரசு உதவி இருக்கிறது.

அரசின் மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதால் அரசின் 85 சதவீத நிதி கொள்ளையடிக்கப்பட்டதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இது மாறி வரும் இந்தியாவின் பிரதிபலிப்பு ஆகும்.

முன்பு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒழுங்காக வரி செலுத்தி வந்தனர். அதில் 85 சதவீதம் கொள்ளையடிப்பது தொடர்ந்தது. ஆனால் அது இப்போது 100 சதவீதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மக்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

ராணுவ தளவாட உற்பத்தி துறை, இந்திய முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். மாறிவரும் இந்த இந்தியாவில், ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றில் நீங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவிலும், டெல்லியில் குடியரசு தின விழாவிலும் கலந்து கொள்ள வசதியாக, முதல் முறையாக இந்த மாநாடு தொடர்ந்து 3 நாள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்