புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் போலியான உத்தரவாத கடிதங்களை பெற்று, வைர வியாபாரி நிரவ் மோடி, கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
இதுபோல், மற்ற பொதுத்துறை வங்கிகளிலும் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் மொத்தம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளது. இந்த கடன்களை பெற்றதில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில், ரூ.50 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வாராக்கடன் கணக்குகள் பற்றி விசாரணை நடத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நிதிச்சேவை பிரிவு செயலாளர் ராஜீவ் குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள், ரூ.50 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள வாராக்கடன்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அதில், மோசடி நடந்துள்ளதா, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.
மோசடி நடந்திருப்பது தெரிய வந்தால், அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை ஊழல் ஒழிப்பு அதிகாரி, புகாருக்கு ஒப்புதல் அளிப்பதுடன், சி.பி.ஐ.யுடன் ஒத்துழைக்க வேண்டும்.
அமலாக்கத்துறை
வாராக்கடன் விவகாரத்தில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா? அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் மீறப்பட்டுள்ளதா? ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவற்றின் உதவியை பெற வேண்டும்.
மேலும், வாராக்கடன் கணக்கு குறித்து மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவிடம் கடன்தாரர் நிலவர அறிக்கையை கேட்டுப்பெற வேண்டும். அந்த அறிக்கை, ஒரு வாரத்தில் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.