18 வயதுக்கு மேற்பட்டோர்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்த பணிகளில் அடுத்தகட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருகிற 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.மேலும் தடுப்பூசி கொள்கையையும் மத்திய அரசு விரிவுபடுத்தி தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மாநில அரசுகள் நேரடியாகவே தடுப்பூசி கொள்முதல் செய்யவும் அனுமதித்து உள்ளது.இவ்வாறு தடுப்பூசி திட்டத்தை பெரும் இயக்கமாக மாற்றியிருக்கும் நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
அந்தவகையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்களாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நேற்று அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில், நாட்டில் கொரோனாவால் எழுந்துள்ள சூழலை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அத்துடன் 18 வயதை எட்டிய அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவது என முடிவெடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்களாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போட்டபிறகும் கூட, கொரோனா நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 48.34 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவெடுத்தபோதும், மத்திய அரசில் பணியாற்றி வரும் மேற்படி பிரிவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.