புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே டெல்லியில் இன்று மீண்டும் 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.